-அம்பாறை நிருபர்-
டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்ட, இரு சாகச மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதிகளில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில், திடீர் போக்குவரத்து விசேட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக பத்து மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
குறித்த நடவடிக்கையின் போது, தலைக்கவசம் அணியாமல் வாகனம் செலுத்தியமை, சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட குற்றங்களுக்காக, 10 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அவற்றை செலுத்தியவர்களும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இது தவிர, டிக்டொக் செயலி ஊடாக கடமையில் உள்ள போக்குவரத்துப் பொலிஸாரை கேலி செய்து காணொளி பதிவிட்டவர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் இருவர் கைதாகினர்.
மேலும் சந்தேக நபர்களில் ஒருவருக்கு, நீதிமன்றத்தால் 38000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது.
ஏனைய சந்தேக நபர்கள் மீது எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.