மட்டக்களப்பு புகையிரத வீதியில், இன்று புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத வீதியின் ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று, திடீரென வீதியில் திரும்ப முற்பட்ட போதே இவ்விபத்து சம்பவித்துள்ளது.
இதன்போது, புகையிரத நிலைய திசையிலிருந்து வருகை தந்த மோட்டார் சைக்கிள், திரும்ப முற்பட்ட காருடன் எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருமே காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அவர்களில் 24 வயதுடைய ஒருவரது கால் உடைந்த நிலையில், பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த இருவரும் விபத்து நடந்த உடனே அங்கிருந்த பொதுமக்களால் மீட்கப்பட்டு, அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
