தொடர்ச்சியாக நீண்ட காலம் பதவியில் இருந்த இந்தியப் பிரதமர் என்ற வரலாற்று சாதனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி படைத்துள்ளார்.
இன்று நிலவரப்படி, அவர் பிரதமர் பதவியில் 4,399 நாட்களைப் பூர்த்தி செய்துள்ளார்.
இந்தச் சிறப்பான தருணத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இவ்வாறு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்த மைல்கல் மோடியின் நீண்டகால சேவையை மாத்திரமன்றி, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தவிர, உலகெங்கிலும் உள்ள தலைவர்களும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து அவரது தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டியுள்ளனர்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 1947 முதல் 1964 வரை பதவியில் இருந்ததுடன், இந்திரா காந்தி இரண்டு முறை பதவிக் காலங்களில் கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பிரதமர் பதவியை வகித்தார்.
2014 மே 26 அன்று முதன்முறையாகப் பிரதமராகப் பதவியேற்ற மோடி, 2019 இல் பெரும்பான்மை ஆதரவுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், 2024 இல் மூன்றாவது முறையாகவும் அந்தப் பதவிக்குத் தெரிவானார்.
கடந்த 12 ஆண்டுகளில் வறுமையைக் குறைத்தல், நலத்திட்டங்களை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் கட்டண முறைகளின் வளர்ச்சி, சாலை, இரயில் மற்றும் விமான நிலைய உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல துறைகளில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
தனது 12 ஆண்டுகாலப் பயணம் மக்களின் நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் மக்கள் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயணம் என மோடி குறிப்பிட்டுள்ளார்.
இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளை வலுப்படுத்துவதற்காகத் தனது அதிகபட்ச முயற்சியை மேற்கொண்டதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
