சில காலமாக நீடித்து வந்த சிறுவர் குழு மோதலின் பின்னணியில், சிறுவன் ஒருவன் கொடூரமாகத் தாக்கப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸாரினால் ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மற்றுமொருவரைத் தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர், வீதிகளில் குழுக்களாகச் சேர்ந்து நடமாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் இரு வெவ்வேறு சிறுவர் குழுக்களுக்கு இடையே மோதல் ஒன்று ஏற்பட்டு, இந்த இரு தரப்பினருக்குமிடையிலான முரண்பாடு தீர்க்கப்படாது தொடர்ச்சியாக நீடித்து வந்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு குழுவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், மாற்றுக் குழுவினரால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார். இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்த நிலையில், இச்சிறுவன் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்படும் காணொளி காட்சி சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியிருந்தது.
சமூக வலைத்தளங்களில் பரவிய இக்காணொளியின் வாயிலாக, தனது மகன் மிக மோசமான முறையில் தாக்கப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார், நேற்று திங்கட்கிழமை ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த ஏறாவூர் பொலிஸார், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் ஒரு சிறுவனை நேற்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவதற்கான சட்ட நடவடிக்கைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான, தற்போது தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சிறுவனைத் தேடும் பணியில் ஏறாவூர் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.