தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியா ‘ஏ’ மற்றும் இலங்கை ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின் போது, வைபவ் சூரியவன்ஷி மற்றும் இலங்கை வீரர் விஷேன் ஹலம்பகே ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட கள மோதலைத் தொடர்ந்து, விஷேன் ஹலம்பகேயின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் ‘சூப்பர் ஓவர்’ மூலம் இலங்கை ‘ஏ’ அணி வெற்றி பெற்றது.
எனினும், போட்டியின் போது விஷேன் ஹலம்பகே மற்றும் வைபவ் சூரியவன்ஷி ஆகிய இருவருக்கும் இடையே மைதானத்தில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
இது தொடர்பான காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில், குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த பெருமளவிலான கிரிக்கெட் ரசிகர்கள் விஷேன் ஹலம்பகேயின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமான கருத்துக்களைப் பதிவிட்டு வசைபாடத் தொடங்கினர்.
அத்துடன், அவரது குடும்ப உறுப்பினர்களும் இணையவழியில் கடுமையான அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் உள்ளாக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
இந்தநிலையில் அவரது கணக்கிற்கு எதிராகப் பெருமளவிலான முறைப்பாடுகள் அளிக்கப்பட்டதன் காரணமாகவே கணக்கு முடக்கப்பட்டிருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இந்த முடக்கம் குறித்து இன்ஸ்டாகிராம் நிறுவனமோ அல்லது வீரர் தரப்போ இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.