வங்கிகள் இலாபம் ஈட்டுவதாகவும், வெளிநாட்டு நாணய மாற்று கிடைப்பதாகவும் கூறி திறைசேரி நிரம்பி வழிகிறது என அரசாங்கம் கூறினாலும், மக்களுக்கு தற்போது யாசகம் எடுக்கும் நிலைமையே ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
திறைசேரி நிரம்புகிறது என்றால் எதற்காக இன்னமும் கடன் வாங்க வேண்டும்? இப்போது கடன் வாங்கி திறைசேரியானது மகாவலி கங்கையைப் போல நிரம்பி வழிகிறது என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இந்தப் பணம் எல்லாம் எங்கே இருக்கிறது? மக்களுக்கு யாசகம் எடுக்க வேண்டிய நிலைதான் ஏற்பட்டுள்ளது. இந்த பணம் பெலவத்தைக்கா போகிறது? அல்லது மற்றவர்களின் கணக்குகளுக்குப் போகிறதா? மக்களுக்கு இதனால் எந்தவொரு நன்மையும் இல்லை.
அதேவேளை , முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது விமர்சனங்கள் இருந்தாலும், அவர் வீழ்ந்திருந்த நாட்டை ஒரு மட்டத்திற்கு கொண்டு வந்தார் .எனினும், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு மீண்டும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் இருந்த பின்னோக்கிய நிலைக்கே தள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.