-பதுளை நிருபர்-
நமுனுகுல கந்தசேன தோட்டப் பகுதியில் இன்று புதன் கிழமை வெட்டி சாய்க்கப்பட்ட மரம் ஒன்றில் சிக்குண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
நமுனுகுலை கனவல்ல 13 ம் கட்டைப் பகுதியை சேர்ந்த வேலு கருணாகரன் (வயது – 66) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற இடத்தின் உரிமையாளர் தனது காணியில் உள்ள கரப்பன்டைன் மரத்தினால் தனது வீட்டுக்கு ஆபத்தான விளைவுகள் ஏதும் ஏற்பட கூடும் என எண்ணி சட்டபூர்வமாக அனுமதி பத்திரத்தை பெற்று குறித்த மரத்தை இன்று காலையில் வெட்டியுள்ளார்.
இதன்போது இடத்தின் உரிமையாளர் உட்பட மேலும் சிலர் மரத்தை வெட்டியதாகவும் மரம் குறித்த வீட்டுப் பகுதியில் விழாமல் இருக்க மரணித்த நபர் உட்பட மேலும் இருவர் மரத்தை கயிரை கட்டி வேறொரு திசைக்கு இழுத்ததாகவும் இதன்போது மரத்தை வெட்டியவர்கள் மரம் சாயப் போகின்றது எனவே மரத்தின் இழுக்கும் மூவரையும் ஓடுமாறு மரத்தை வெட்டியவர்கள் கூறியதாகவும் இதன்போது இருவர் வேறு திசையை நோக்கி ஓடியதாகவும் மரணித்த நபர் மரம் சாயும் திசையில் ஓடியதாகவும் மரத்தின் கிளைகள் குறித்த நபரின் மீது பட்டதினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சுஜித் வெதமுல்லவின் ஆலோசனையின் பேரில் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் ஆலோசனையின் பேரில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்