மட்டக்களப்பு மாவட்டம்-கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திராய்மடு பகுதியில் உள்ள வீடொன்றில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சமையல் எரிவாயு சிலிண்டர் தீப்பற்றிய நிலையில், வீட்டின் உரிமையாளரின் புத்திசாதுரியமான செயலால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் நேற்று இரவு 10.00 மணியளவில் வீட்டின் உரிமையாளர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தி உணவு தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
இதன்போது, சிலிண்டருடன் இணைக்கப்பட்டிருந்த குழாயில் (Hose) ஏற்பட்ட திடீர் கசிவு காரணமாக தீப்பற்றிக் கொண்டது.

நிலைமையைக் கண்டு பதற்றமடையாத வீட்டின் உரிமையாளர், உடனடியாக புத்திசாதுரியமாகச் செயற்பட்டு, ஈரமான சாக்கு ஒன்றைப் போட்டு, தண்ணீர் ஊற்றி தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்.
அத்துடன், எரிவாயு சிலிண்டரை சமையலறையிலிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தி வீட்டின் வெளிப்பகுதிக்குக் கொண்டு சென்று வைத்துள்ளார்.
இதேவேளை, அருகில் இருந்தவர்கள் இது குறித்து மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்புப் பிரிவினருக்கு உடனடியாகத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவல் கிடைத்த சில நிமிடங்களிலேயே தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலதிகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
ஆபத்தான வேளையில் மிக விரைவாகச் செயற்பட்ட தீயணைப்புப் பிரிவினருக்கு அப்பகுதி மக்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.
