இந்தியா – இமாச்சல பிரதேசம், மண்டியில் கல்லூரிக்கு செல்லும் வழியில், 19 வயது மாணவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இமாச்சல பிரதேசம் மண்டி மாவட்டத்தில், கோபால்பூர் பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவர் சர்காகாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார்.
குறித்த யுவதி கல்லூரிக்கு செல்வதற்காக ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்தே செல்வது வழமை.
இந்நிலையில், சம்பவ தினத்தன்று தனியாக சென்ற மாணவியை, மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த மர்மநபர் ஒருவர் வழிமறித்துள்ளார்.
அதைக் கண்டதும் அதிர்ச்சியடைந்த மாணவி, என்ன செய்வது என்று தெரியாமல் அப்படியே நின்றுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த நபர், தம்வசம் வைத்திருந்த விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அரிவாளை திடீரென எடுத்து மாணவியின் கையில் வெட்டியுள்ளார்.
தொடர்ந்து ஆவேசமாக மாணவியை தாக்கி கீழே தள்ளி, துடிக்க துடிக்க கழுத்தை அறுத்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில், அங்கிருந்து தப்பியோட முயற்சித்த சந்தேகநபரை, ஊர்மக்கள் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த மர்மநபரை கைது செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.