கள்ளக்குறிச்சி சுடுகாட்டிற்கு அருகில் அடங்கிய 52 உயிர்கள் : யார் இந்த கண்ணுக்குட்டி…?

-ச.சந்திரபிரகாஷ்-

தமிழ்நாடு கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் குடித்ததில் இன்று சனிக்கிழமை வரை 52 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது.

ஊரே சுடுகாடான இந்தவழக்கை சிபிசிஐடி பொலிஸார் விசாரித்து வருகின்ற நிலையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய உயிரிழப்பிற்கு காரணமான கண்ணுகுட்டியை நேற்று முன் தினம் பொலிசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலையில் இருந்து தான் இந்த கள்ளச்சாராயம் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட கண்ணுகுட்டி 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்ற காவலில் கடலூர் சிறையில் அடைக்கப்படுட்டு இருக்கும் இந்த கண்ணுக்குட்டி பற்றி பலதகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் பகுதியை சேர்ந்தவர்தான் கண்ணுக்குட்டி என்று அழைக்கப்படும் கோவிந்தராஜ் கருணாபுரம் பகுதியில் பல ஆண்டுகளாக கள்ளச்சாராய விற்பனை செய்து வருகிறார்.

தன்னுடய சகோதரர் தாமோதரன் மற்றும் மனைவி விஜயா ஆகியோருடன் சேர்ந்து சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த கண்ணுக்குட்டி இவருடய வீடு இருக்கும் பகுதியை சாராயக் கடை என்றே அப்பகுதி சொல்லும் அளவிற்கு கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளமை வெளிப்படையாக இடம்பெற்றுவந்துள்ளது.

முதலில் ஆற்றங்கரையோரம் மறைவாக 50 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்க கூடிய கள்ளச்சாராய பாக்கெட்டுகளை கண்ணுக்குட்டி விற்பனை செய்து வந்துள்ளார். பின்னர் சிறிது காலம் கழித்து தனது வீட்டின் அருகே சிறிய கொட்டகை ஒன்றை அமைத்து கள்ளச்சாராய விற்பனை செய்ய தொடங்கியுள்ளார்.

கள்ளச்சாராய விற்பனை அதிகரிக்க தொடங்கியதால் இன்னொரு வீட்டை தனியாக வாடகைக்கு எடுத்து வியாபாரத்தை விரிவு படுத்தியுள்ளார். டாஸ்மாக் கடை திறக்கும் முன்பே இவர் விற்பனையை தொடங்கிவிடுவார் என்றும் 24 மணிநேரமும் இது இயங்கிவந்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தனைக்கும் கள்ளக்குறிச்சி பொலிஸ் நிலையத்தில் இருந்து வெறும் 300 மீற்றர் தொலைவில் இருக்க கூடிய சுடுகாட்டு ஓரம் தான் இந்த கள்ளச்சாராய விற்பன நடைபெற்று வந்து இருக்கிறது. பலர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் முன்வைக்கும் பாரிய குற்றச்சாட்டாக உள்ளது.

கடந்த ஆண்டு விழுப்புரம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்திற்கு பின்னர் சில மாதங்கள் விற்பனைக்கு இடைவெளி விட்ட கண்ணுக்குட்டி அடுத்த சில மாதங்களில் பொலிசாரை கைக்குள் போட்டுக் கொண்டு சாராய விற்பனையை மீண்டும் தொடங்கியிருக்கிறார்.

இவர் வசித்து வந்த சுற்று வட்டார கிராமத்தில் நடைபெறும் திருவிழாக்கள், திருமணம், மரணவீடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு மொத்தமாக கள்ளச்சாராய விற்பனை செய்து வந்துள்ளார் இந்த கண்ணுக்குட்டி.

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வரும் கண்ணுக்குட்டி மீது ஏற்கனவே 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இவருக்கு குடிப்பழக்கம் கிடையாது என்பதுதான் எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குடிப்பழக்கம் இல்லாத கண்ணுக்குட்டியால் எப்படி கள்ளச்சாராயம் காய்ச்ச முடிந்தது என்பதுதான் இப்போதைக்கு உள்ள அவிழாத முடிச்சாகவுள்ளது.

இந்தநிலையில் கண்ணுக்குட்டி மட்டும் இன்றி அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. அத்தோடு, இனியொரு சம்பவம் இப்படி நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மக்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்