ராகமை பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வைத்து பெண்ணொருவரின் தலைமுடியை வெட்டி, அவரைத் துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஐவர் ராகமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் பரவிய காணொளி காட்சிகளின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த ராகமை பொலிஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பெற்றதன் பின்னர் அவரை மருத்துவ பரிசோதனைகளுக்காக ராகமை போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் மூலம், ராகமை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய பிரதான பெண் சந்தேகநபர் மற்றும் 20, 21, 22, 23 வயதுகளையுடைய ராஜாங்கனை, கடவத்தை, ராகமை மற்றும் திருகோணமலை சீனக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று சனிக்கிழமை வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ராகமை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.