மருந்து விற்பனையில் ஏற்பட்டுள்ள சந்தேகத்துக்கிடமான முறைகேடுகளை விசாரிக்க, கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் உள்ள சீன–இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியசாலைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சில மருந்து விநியோகஸ்தர்கள், சந்தை விலையைவிட நான்கு முதல் ஐந்து மடங்கு அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த அதிக விலை நிர்ணயம், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் இலாப வரம்பையும் மீறுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மருத்துவர்கள், வழமையான முறையில் வெளி நிறுவனங்களில் இருந்து மருந்துகள் மற்றும் அறுவை உபகரணங்களை பரிந்துரைக்கத் தகுதியுடையவர்கள் என அவர் கூறினார்.
இருப்பினும், சமீபத்திய ஊழல் சந்தேகம், குறிப்பிட்ட ஒரு மருந்து சந்தை மதிப்பை விட பல மடங்கு அதிகமாக விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த காரணத்தால் உருவாயிருந்தது.
அவசர கொள்முதல், உரிய சட்டவிதிகளின் கீழ் அனுமதிக்கப்பட்டதாக இருக்கலாம்.
எனினும், சந்தையை விட பல மடங்கு அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்படும்போது, அது சுரண்டலாகும் எனவும் அதுவே விசாரணைக்கு வழிவகுப்பதாகவும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.