மன்னாரில் பீடி சுற்றும் இலைகளுடன் 3 நபர்கள் கைது

-மன்னார் நிருபர்-

வங்காலை கடற்கரையில் இருந்து பீடி இலைகள் கொண்ட பொதிகள் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்ட போது இன்று திங்கட்கிழமை காலை மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரினால் ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட மூடைகள் மீட்கப்பட்டுள்ளதோடு மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வங்காலை கடற்கரையில் வைத்து ஒரு தொகுதி பீடி இலைகள் கொண்ட பொதிகள் ஏற்றப் படுவதாக கடற்படையினர் மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு தகவல் வழங்கினர்.

குறித்த தகவல்களுக்கு அமைவாக சென்ற குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வங்காலை கடற்கரையில் வாகனம் ஒன்றில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் ஏற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

80 மூடைகளில் பொதி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 888 கிலோ பீடி இலைகள் மீட்கப் பட்டதோடு மன்னார் பகுதியைச் சேர்ந்த 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட பீடி இலை மூடைகள்,வாகனம் மற்றும் கைது செய்யப்பட்ட 3 சந்தேகநபர்கள் வங்காலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வங்காலை பொலிஸார் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபர்களையும்,மீட்கப்பட்ட பொருட்களையும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்