தேசிய மக்கள் சக்தியின் (NPP) நிறைவேற்றுக்குழு உறுப்பினர் லால் விஜேநாயக்க, மக்கள் வாக்கெடுப்பு இன்றி 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், தொடர்ந்து தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிப்பதாக தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனத் தெரிவித்துள்ள அவர், அதன் விளைவுகள் குறித்து கவலைகளை முன்வைத்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடியதாக லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த கலந்துரையாடலில் இடம்பெற்ற விடயங்களை வெளியிட அவர் மறுத்துள்ளார். கட்சிக்குள் தனது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமது நிலைப்பாடு காரணமாக தேசிய மக்கள் சக்தி நிறைவேற்றுக்குழுவில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்படாது என எதிர்பார்ப்பதாகவும் லால் விஜேநாயக்க தெரிவித்துள்ளார். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கும் போராட்டங்களில் இணைந்துகொள்ளப் போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் லால் விஜேநாயக்கவும் மனுதாரராக இருந்தார். மக்கள் வாக்கெடுப்பின் மூலம் பொதுமக்களின் அங்கீகாரம் பெறப்பட வேண்டும் எனக் கோரி அவர் உள்ளிட்ட மனுதாரர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.
எவ்வாறாயினும், 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துக்கு மக்கள் வாக்கெடுப்பு அவசியமில்லை என உச்ச நீதிமன்றம் தீர்மானித்திருந்தது. அந்தத் தீர்மானம் செப்டெம்பர் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.









