போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 104 புதிய பேருந்துகளுடன் கூடிய மெட்ரோ பேருந்து சேவையின் புதிய வழித்தடங்கள் நாளை செவ்வாய்க்கிழமை முதல் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மில்லேனியம் சிட்டி முதல் கொழும்பு கோட்டை வரையும், பாணந்துறை முதல் தெமட்டகொட ரயில் நிலையம் வரையும், கெஸ்பேவ முதல் புறக்கோட்டை வரையும், ஏகல முதல் பத்தரமுல்லை வரையும் புதிய மெட்ரோ பேருந்து சேவைகள் இயக்கப்படவுள்ளன.
தற்போது கடவத்தை – மாகும்புர மற்றும் மாகும்புர – கொழும்பு கோட்டை ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ பேருந்து சேவைகள் இயங்கி வருகின்றன.
இதனுடன், கொழும்பு நகருக்குள் பயணிப்பதற்காக சுற்றுவழி பேருந்து சேவையொன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் மூலம் மெட்ரோ பேருந்து சேவை உள்ளடக்கும் வழித்தடங்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரிக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் ஏழு வழித்தடங்களிலும் மொத்தம் 121 மெட்ரோ பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கில், பேருந்துகளுக்கான முன்னுரிமை வழித்தடத்தை (Priority Bus Lane) நடைமுறைப்படுத்துவது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.
முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் மெட்ரோ பேருந்து சேவை விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், பின்னர் யாழ்ப்பாணம், கண்டி, நுவரெலியா மற்றும் காலி உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.









