இலங்கை கிரிக்கெட் வீரர் சாமிக்க கருணாரத்னவுக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
அவர் தந்தை எனக் கூறப்படும் குழந்தைக்கான பராமரிப்புக் கொடுப்பனவு தொடர்பான வழக்கில், இன்று திங்கட்கிழமை, நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதையடுத்து இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும், “குறித்த குழந்தையின் தந்தை” என்ற குற்றச்சாட்டை சாமிக்க கருணாரத்ன மறுத்துள்ளார்.
வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் கசுன் கஞ்சன தசநாயக்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சாமிக்க கருணாரத்ன நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து, அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், சாமிக்க கருணாரத்ன 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கை அணியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஜப்பான் சென்றுள்ளார்.
அவர் தேசிய கடமையில் ஈடுபட்டுள்ளதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாத நிலை தொடர்பில் உரிய தகவல் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்கு முறையாகத் தெரிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததை அடிப்படையாகக் கொண்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைக்கான பராமரிப்புச் செலவை சாமிக்க கருணாரத்ன செலுத்துமாறு நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.









