நாட்டின் 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் கடும் மின்னல் தாக்கம் மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சனிக்கிழமை இரவு 11.30 மணி வரை அமுலில் இருக்கும் இந்த எச்சரிக்கையின்படி, மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பதிவாகலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- அம்பாறை
- அனுராதபுரம்
- பதுளை
- கொழும்பு
- காலி
- கம்பஹா
- ஹம்பாந்தோட்டை
- களுத்துறை
- கண்டி
- கேகாலை
- குருநாகல்
- மன்னார்
- மாத்தளை
- மாத்தறை
- மொனராகலை
- நுவரெலியா
- பொலன்னறுவை
- புத்தளம்
- இரத்தினபுரி
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படலாம் எனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல், வீடுகளுக்குச் சேதம் ஏற்படுதல், மின்சாரத் தடை மற்றும் வீதி, ரயில், விமானப் போக்குவரத்துகளில் இடையூறுகள் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்த்து, கட்டடங்களுக்குள் பாதுகாப்பாக இருக்குமாறும், திறந்தவெளிகளில் தங்குவதைத் தவிர்க்குமாறும், மின் உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் மற்றும் சிறிய படகுகளைப் பயன்படுத்துவோர் கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், கடலில் இருப்பவர்கள் விரைவாகக் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.











