முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நீதிமன்றத்தில் சாட்சியமளித்தபோது ஊடகவியலாளர் பொத்தல ஜயந்தவைத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்டமைக்கு, புலம்பெயர்ந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர் பொத்தல ஜயந்த பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் தனது சமூக ஊடகப் பக்கத்தில் நீண்ட பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர், கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகப் பதவி வகித்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சந்திப்பொன்றை நினைவுகூர்ந்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராகத் தானும் சக ஊடகவியலாளர் சனத் பாலசூரியவும் முன்னெடுத்த எதிர்ப்புப் போராட்டங்கள் தொடர்பில், பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மூத்த ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக பொத்தல ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்து போராட்டங்களை ஏற்பாடு செய்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என கோட்டாபய ராஜபக்ஷ எச்சரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் சந்திப்பின்போது அப்போதைய லேக் ஹவுஸ் தலைவர் பந்துல பத்மகுமார மற்றும் லக்ஷ்மன் ஹுலுகல்ல ஆகியோரும் பிரசன்னமாகியிருந்ததாக அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த அச்சுறுத்தல்கள் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடு செய்ய முயற்சித்தபோது, கோட்டை பொலிஸ் நிலைய அதிகாரிகள் முறைப்பாட்டைப் பொறுப்பேற்க மறுத்ததாகவும் பொத்தல ஜயந்த குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்குச் சில மாதங்களுக்குப் பின்னர், வெள்ளை வானில் கடத்தப்பட்டுத் தான் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், இதனால் தனது இடது காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 28 நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதுடன், ஆறு மாதங்கள் படுக்கையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும், இன்றும் பகுதியளவிலான உடல் ஊனத்துடன் வாழ்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது, பொத்தல ஜயந்தவைத் தனக்குத் தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், பந்துல பத்மகுமாரவைத் தெரியும் என ஒப்புக்கொண்டிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் தனது பதிவில்,
“என்னைச் சித்திரவதை செய்தவர்கள் என்னை மறந்திருக்கலாம் : ஆனால் என்னைச் சித்திரவதை செய்தவர்களை நான் மறக்கவில்லை” எனப் பொத்தல ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.










