அம்பாறை மாவட்டம், காரைதீவு பிரதேசத்தில் போக்குவரத்துக்கும் மழைநீர் வடிந்தோடுவதற்கும் இடையூறாக வீதியோரங்களிலும் வடிகால் பகுதிகளிலும் குவிக்கப்பட்டுள்ள கழிவுகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பொருட்களை அகற்றும் விசேட நடவடிக்கை இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
காலநிலை மாற்றம் காரணமாக நாட்டில் அடிக்கடி ஏற்பட்டு வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்களைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பணிகளிலிருந்து வெளியேறும் கழிவுகள், மணல், கற்கள், செங்கற்கள் உள்ளிட்ட நிர்மாணப் பொருட்களை வீதியோரங்களிலும் மழைநீர் வடிகால்களிலும் கொட்டுவதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், மழைநீர் சீராக வடிந்தோடுவதும் தடைப்படுகின்றது.
இதனால் கனமழை பெய்யும் சந்தர்ப்பங்களில் நீர் தேங்குதல், வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்குள் வெள்ளநீர் புகுதல், வீதிப் போக்குவரத்துப் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
இந்நிலையைக் கருத்திற்கொண்டு, வீதிப் போக்குவரத்துக்கும் மழைநீர் வடிந்தோடுவதற்கும் இடையூறாக உள்ள கழிவுகள் மற்றும் கட்டிட நிர்மாணப் பொருட்களை உடனடியாக அகற்றுமாறு காரைதீவு பிரதேச சபை ஏற்கனவே பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. இதன் முதற்கட்டமாகவே இன்று இந்த அகற்றும் களப்பணி முன்னெடுக்கப்பட்டது.
காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன், காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜீ. அருணன், காரைதீவு பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், காரைதீவு பிரதேச செயலக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இக்களப்பணியில் நேரடியாக ஈடுபட்டனர்.










