1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அவற்றின் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொள்வதற்காக விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று சனிக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் தாக்கங்கள் குறித்து ஆய்வு செய்து, விரிவான அறிக்கையொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பது இந்தக் குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பொறுப்பாகும்.
அத்துடன், தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்துதல் மற்றும் குறித்த வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் தொடர்பான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளையும் இக்குழு சமர்ப்பிக்கவுள்ளது.
அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இந்தத் தெரிவுக்குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கை முழுவதும் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளே கறுப்பு ஜூலை என அழைக்கப்படுகின்றன. இந்த வன்முறைகளில் பெருமளவானோர் உயிரிழந்ததுடன், சொத்துக்கள் அழிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.
இச்சம்பவங்கள் இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டுப் போரின் முக்கிய திருப்புமுனையாகவும் பரவலாகக் கருதப்படுகின்றன.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள்:
- அமைச்சர் சரோஜா போல்ராஜ் – தலைவர்
- அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார
- பிரதி அமைச்சர் எரங்க குணசேகர
- பிரதி அமைச்சர் முனீர் முலாபர்
- நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்
- நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்
- நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன்
- நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி
- நாடாளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க
- நாடாளுமன்ற உறுப்பினர் சேன நாணயக்கார
- நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்க
- நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணி விஜேசிங்க









