வீதி விபத்தைத் தொடர்ந்து மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞர் ஒருவரின் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கு அவரது பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளதையடுத்து, பல நோயாளிகளுக்கு மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வேயாங்கொடையைச் சேர்ந்த குறித்த இளைஞர், வீதி விபத்தில் காயமடைந்த நிலையில் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அவர் மூளைச்சாவடைந்தமை உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரது இதயம், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகியவற்றை மாற்று அறுவைச் சிகிச்சைக்காகத் தானம் செய்வதற்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததாக வைத்தியசாலைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, விசேட மருத்துவக் குழுவினரால் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு, இலங்கை விமானப்படையின் உதவியுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில், தனது மகனை இழந்த துயரத்திலும், அவர் மற்றவர்களுக்கு வாழ்வளித்துச் சென்றுள்ளதாக அவரது தந்தை உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
“உன்னால் இன்று பலர் உயிர்வாழ்வார்கள். எனது அருமை மகனே, எங்களை விட்டுப் பிரிவதற்கு முன்பாக மற்றவர்களுக்கு உயிரைக் கொடுத்துவிட்டாய்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மகன், அவனது தாய், நான், அவனது மூத்த சகோதரர் மற்றும் இளைய சகோதரி ஆகியோரை விட்டுச் சென்றுவிட்டான். நீ இல்லாமல் இந்த வீட்டில் நாங்கள் நால்வரும் எவ்வாறு வாழப்போகிறோம்?” எனவும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
மருத்துவக் குழுவினர், இலங்கை விமானப்படையினர் மற்றும் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் உடல் உறுப்புகளை வெற்றிகரமாக அகற்றி, உரிய இடங்களுக்குக் கொண்டுசெல்ல முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.









