தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அதனைத் தவிர அரசாங்கத்திடம் வேறு கொள்கைகள் இல்லை என விமர்சித்துள்ளார். அத்துடன், ஒரு வர்க்கத்துக்கு எதிராக மற்றொரு வர்க்கத்தினரிடையே வர்க்க வெறுப்பைத் தொடர்ந்து வளர்ப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை சட்டக் கல்லூரியின் Equality Initiative அமைப்பின் VORTEX ஐந்தாவது தொகுதி வெளியீட்டு நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு நடவடிக்கை சிறப்பானது எனக் குறிப்பிட்ட அவர், அதனைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் அரசாங்கத்திடம் இல்லை என்பதே தனது விமர்சனம் எனத் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் தொடர்பான எனது குறை என்னவென்றால், சிறப்பானதாக இருந்த ஊழல் ஒழிப்பு நடவடிக்கையைத் தவிர வேறு எந்தக் கொள்கையும் அவர்களிடம் இல்லை. வேறு எதுவும் இல்லை” என அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு வர்க்கத்துக்கு எதிராக மற்றொரு வர்க்கத்தினரிடையே வெறுப்புணர்வைத் தொடர்ந்து வளர்ப்பதைத் தவிர அரசாங்கத்திடம் வேறு எதுவும் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்கள் தலைமைத்துவப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அரசியல்வாதிகளோ அரசியல் கட்சிகளோ தலைமைத்துவத்தை வழங்கும் வரை காத்திருக்கக் கூடாது என்றும் முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
“நீங்கள்தான் தலைமைத்துவத்தை ஏற்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் பல்வேறு அரசியல் கட்சிகளிலும் இருப்பவர்கள் தலைமைத்துவத்தை ஏற்கும் வரை காத்திருக்க வேண்டாம்” எனத் தெரிவித்த அவர், கொள்கைகள் இல்லாத அரசியல்வாதிகளுக்கு மக்கள் எவ்வாறு வாக்களிக்குமாறு கேட்கப்பட முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை இயற்கை வளங்கள் நிறைந்த நாடு என்றும், அவற்றில் பல இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்புகள் காரணமாக மனித வளத்திலும் நாடு உயர்ந்த நிலையில் இருப்பதாகத் தெரிவித்த அவர், இருப்பினும் உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை காணப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கான முக்கிய காரணம், அனைவரையும் உள்ளடக்கிய ஒரே தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாடு தோல்வியடைந்தமையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முந்தைய நாடாளுமன்றம் ஒன்றில் சுமார் 20 உறுப்பினர்கள் மாத்திரமே பட்டப்படிப்பை நிறைவு செய்திருந்ததாகவும், பெரும்பாலானவர்கள் உயர்தரப் பரீட்சையைக்கூட நிறைவு செய்யவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மாத்திரமன்றி, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சமத்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திய சந்திரிகா குமாரதுங்க, சமத்துவமின்மையே இலங்கை உண்மையான முன்னேற்றத்தையும் மகத்துவத்தையும் அடைவதற்குத் தடையாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.









