தென்கொரியாவின் ஹ்வாசோங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்குக் கொண்டுவருவதற்காக, தென்கொரிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
குறித்த விபத்து நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தென்கொரிய பொலிஸார், சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு நவம்பர் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்களை விரைவாக நாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தேவையான நடைமுறைகளை முன்னெடுப்பதற்காக, தூதரகத்தின் கொன்சியூலர் பிரிவு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அமைச்சு மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தூதரக மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்த பின்னரே தென்கொரியாவுக்குத் தொழிலுக்காகச் சென்றவர்கள் எனவும் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.









