விபத்தில் மூளைச்சாவடைந்த 19 வயது இளைஞரின் இதயத்தைப் பயன்படுத்தி, 14 வயது சிறுவனுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வெற்றிகரமாக இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள வைத்தியசாலையொன்றில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சையாகக் கூறப்படும் இந்தச் சிகிச்சை, கடந்த நவம்பர் 26ஆம் திகதி இருதய மற்றும் மார்பு அறுவைச் சிகிச்சை நிபுணர் வைத்தியர் அனில் அபேவிக்ரம தலைமையிலான மருத்துவக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுவனின் இதயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படாவிட்டால் இன்னும் சில நாட்களில் உயிரிழக்கும் அபாயம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கான இதயத்தை வழங்கிய 19 வயது இளைஞர், விபத்தொன்றைத் தொடர்ந்து கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூளைச்சாவடைந்துள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் இதயத்தைத் தானமாக வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதயத்தை உடனடியாக கொழும்புக்குக் கொண்டுவர வேண்டியிருந்த நிலையில், ஹெலிகொப்டர் மூலம் எடுத்துச் செல்வதற்குத் திட்டமிடப்பட்டது. எனினும், கம்பஹா பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை மற்றும் கடும் மழை காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இதனையடுத்து, பொலிஸாரின் உதவியுடன் வீதி வழியாக இதயத்தைக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக கம்பஹாவிலிருந்து கொழும்பு வரையிலான பிரதான வீதியில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, பொலிஸ் பாதுகாப்புடன் இதயம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி மாலை 5 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட அறுவைச் சிகிச்சை நள்ளிரவு வரை ஏழு மணித்தியாலங்களுக்கும் மேலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அறுவைச் சிகிச்சையின் பின்னர் சிறுவனின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் முதலாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சை சில ஆண்டுகளுக்கு முன்னர் கண்டி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அண்மைய சிகிச்சை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது இதய மாற்று அறுவைச் சிகிச்சையாகக் குறிப்பிடப்படுகிறது.









