அத்துருகிரிய-பலன்வத்த பகுதியில் இடம்பெற்ற பல மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் 21ஆம் திகதி, 10.8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை இந்தக் கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த போதைப்பொருள் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஹங்வெல்ல, பாதுக்க, கொட்டாவ மற்றும் மீகஹவத்த பொலிஸ் நிலையங்களில் பதிவான நான்கு மோட்டார் சைக்கிள் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், கழற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்களை வைத்திருந்த மேலும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நால்வரும் 19 முதல் 39 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், அவர்கள் ஹோகந்தர மற்றும் அத்துருகிரிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரிப்பாகங்கள் சிலவற்றையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










