நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயினால் மனித உயிரிழப்புகள் ஏற்படாத நிலையை 2030ஆம் ஆண்டுக்குள் அடைவதற்கான அடுத்த பிராந்திய நாடாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளது.
நாய்கள் மூலம் பரவும் வெறிநாய்க்கடி நோயினால் மனித உயிரிழப்புகள் பூச்சிய நிலையை அடைந்துள்ள பூட்டான், இந்த இலக்கை நோக்கிய அடுத்த நாடாக இலங்கையை அடையாளப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) உலகளாவிய வெறிநாய்க்கடி நோய் நிபுணர்கள் ஆலோசனைக் கூட்டத்தின்போது, பூட்டான் இந்த இலக்கை அடைவதற்கான அடையாளப் பொறுப்பை இலங்கையிடம் கையளித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தனது ‘X’ சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது.
இதன்போது, பெருமளவிலான நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல், நோய்த் தொற்றுக்குள்ளான பின்னரான தடுப்பு சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்துதல், ‘ஒரே சுகாதாரம்’ (One Health) அணுகுமுறையின் கீழ் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் பல்வேறு துறைகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் தாம் அடைந்த முன்னேற்றங்களை பூட்டான் பகிர்ந்துகொண்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை சுகாதார அமைச்சின் செயலாளர் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பிராந்தியத்தில் வெறிநாய்க்கடி நோயை ஒழிப்பதற்கான அடுத்த இலக்கு நாட்டைக் குறிக்கும் அடையாளப் பொறுப்பைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
அத்துடன், 2025ஆம் ஆண்டுக்கான வெளிப்புற நிகழ்ச்சித்திட்ட மீளாய்வு அறிக்கையும் இலங்கையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 2030ஆம் ஆண்டுக்குள் இலக்கை அடைவதற்கான இலங்கையின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் பரிந்துரைகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அறிவியல் ஆதாரங்கள், பிராந்திய நாடுகளின் அனுபவங்கள் மற்றும் அரசியல் ரீதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த ‘ஒரே சுகாதாரம்’ நடவடிக்கைகளாக மாற்றுவதே தற்போதைய முக்கிய முன்னுரிமை என உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் வெறிநாய்க்கடி நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வலுப்படுத்தவும், நாய்கள் மூலம் பரவும் இந்நோயினால் மனித உயிரிழப்புகள் பூச்சிய நிலையை அடையவும் அரசாங்கம் மற்றும் ஏனைய பங்காளி அமைப்புகளுடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் உறுதியளித்துள்ளது.










