வவுனியா – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த ஆலயத்தின் பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை வெடுக்குநாறிமலையில் விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகத்தினர் முயற்சிகளை எடுத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்களது முயற்சிக்கு பொலிஸாரால் தடங்கல் ஏற்பட்டிருந்ததாக தெரிவித்து ஆலய நிர்வாகத்தினால் வவுனியா நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதனை கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிமன்றம் வெடுக்குநாறிமலை ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு உத்தரவு வழங்கியது.
இதனையடுத்து சிவராத்திரி தின ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை மாலை உழவு இயந்திரத்தில் சென்றுகொண்டிருந்த பூசகர் உட்பட இருவர் நெடுங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடுக்குநாறிமலை ஆலயத்தில் பூஜை வழிபாடுகளை மேற்கொள்வதற்கு வவுனியா நீதிமன்றம் கடந்தவருடம் உத்தரவு வழங்கியிருந்தது.
அந்த உத்தரவை நேற்று முன்தினம் நீதிமன்றம் மீண்டும் உறுதிசெய்திருந்தது. இந்த நிலையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது