-நிந்தவூர் நிருபர் யுசைல்-
நிந்தவூர் பிரதேச சபையின் இயங்கும் சன சமூக நிலையங்களில் அல் – ஹிக்மத் மற்றும் ஜலாலியா சனசமூக நிலையங்களினால் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 60 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சித் திட்டமானது நிந்தவூர் பிரதேச சபையினால் நேற்று வெள்ளிக்கிழமை பி.ப. 4.00 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வினை அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், ஆளுநர் அவசர சந்திப்பின் காரணமாக இந்நிகழ்விற்கு வருகை தரமுடியாத நிலையில், நிந்தவூர் பிரதேச சபையின் செயலாளர் திருமதி. ரீ.பரமேஸ்வரன் தலைமையில் இந்நிகழ்வு பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதில் நிந்தவூர் 09, நிந்தவூர் -24, நிந்தவூர் -25 ஆகிய பிரிவுகளில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் 60 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அம்பாறை உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் கடமையாற்றும் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ரீ.ரவீந்திரலிங்கம் கலந்து சிறப்பித்து இருந்தார்.






