வரி செலுத்தாமல் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு பிஎம்டபிள்யூ (BMW) வாகனத்தை வைத்திருந்தமை மற்றும் வரி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சொகுசு வாகனம் தொடர்பாக, தனது சட்டத்தரணிகள் ஊடாக அவர் நீதிமன்றத்துக்கு இந்த நிலைப்பாட்டை அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வாகனம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) வாக்குமூலம் வழங்கியதைத் தொடர்ந்து, ஒக்டோபர் 23ஆம் திகதி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு, பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முந்தைய நாள், கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றில் WP C 24-0430 என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட கறுப்பு நிற பிஎம்டபிள்யூ வாகனம் நிறுத்தப்பட்டிருந்ததாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
வாகனத்தை ஹோட்டலில் நிறுத்திய நபர், அது ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமானது என்றும், அவரது சாரதியினால் அங்கு கொண்டுவரப்பட்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வாகனத்தைச் சோதனையிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான பல ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். எனினும், வாகனத்தின் பதிவை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எதுவும் அங்கு காணப்படவில்லை.
மேலும், பிஎம்டபிள்யூ வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதிவு இலக்கம் நாவலையில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த வாகனத்தின் சேஸிஸ் இலக்கத்தைக் கொண்ட வாகனம் சட்டபூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என இலங்கை சுங்கத் திணைக்களமும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரச பகுப்பாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனையில், குறித்த வாகனம் சட்டவிரோதமாகப் பொருத்தி உருவாக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
அத்துடன், 2021ஆம் ஆண்டு இங்கிலாந்தில் திருடப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட சொகுசு வாகனமொன்றுக்கும் இந்த பிஎம்டபிள்யூ வாகனத்துக்கும் தொடர்புகள் இருக்கலாம் எனப் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனம் ஆரம்பத்தில் ஜேர்மனியில் தயாரிக்கப்பட்டு, இங்கிலாந்திலுள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும், அதன் சேஸிஸ் மற்றும் இயந்திர இலக்கங்கள் ஐக்கிய இராச்சியத்தில் திருடப்பட்டதாகப் பதிவான வாகனத்துடன் தொடர்புடையவையாகக் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.










