சர்ச்சைக்குரிய கிரிஷ் நிறுவன கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தாக்கல் செய்த பிணை மனு மீதான தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) சமர்ப்பிப்புகள் மற்றும் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளின் வாதங்களைக் கருத்திற்கொண்ட பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கொழும்பு கோட்டை பகுதியில் அமைந்துள்ள ட்ரான்ஸ்வேர்க்ஸ் சதுக்கத்திலுள்ள காணியைப் பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்திற்காக கிரிஷ் நிறுவனத்துக்கு மாற்றுவதுடன் தொடர்புடையதாக, 100 மில்லியன் ரூபா இலஞ்சம் பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் நாமல் ராஜபக்ஷ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த காணியை அந்த நிறுவனத்துக்கு மாற்றுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்குப் பதிலாகவே இந்தப் பணம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.










