இங்கிரிய பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்து மீது கறுப்பு எண்ணெயை வீசியதுடன், அதன் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் தனியார் பேருந்து உரிமையாளர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இங்கிரிய, கெட்டகரெல்ல பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஹொரணை சாலையின் கீழ், கரந்தன – ஹொரணை வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் பேருந்தை வழிமறித்து, அதன் முன்பக்கக் கதவு வழியாக சாரதி மீது கறுப்பு எண்ணெயை வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பின்னர் பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது அவர்கள் உடல்ரீதியான தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, தனியார் பேருந்து உரிமையாளர் ஒருவரையும் நடத்துநர் ஒருவரையும் இங்கிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.










