களுத்துறை நாகஸ் சந்தி பகுதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்து பேருந்தை வழிமறித்த ஆறு பேர் கொண்ட குழுவினர், பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
கொழும்பிலிருந்து களுத்துறைக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற சொகுசுப் பேருந்து, பயணிகளை இறக்கிவிட்ட பின்னர் நிறுத்துமிடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேர், பேருந்தின் பாதையை மறித்து அதனை முன்னோக்கிச் செல்லவிடாமல் தடுத்து, சாரதி மற்றும் நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவம் பேருந்தின் உட்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது.
மொரட்டுவை பகுதியில் முன்னதாக இடம்பெற்ற தகராறே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. களுத்துறையை நோக்கிப் பேருந்து பயணித்தபோது, ஒருவர் பேருந்தில் ஏறுவதற்கு நடத்துநர் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து இந்த முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தாக்குதலில் காயமடைந்த நடத்துநர், களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை ஓரளவு கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் களுத்துறை வடக்குப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.










