என்ஜின் ஒயில், கியர் ஒயில், மசகு எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் ஆகியவற்றை விற்பனை செய்யும் வர்த்தகர்கள், தமது தயாரிப்புகளில் கட்டாயமாகக் குறிப்பிடப்பட வேண்டிய அரசாங்க ஒப்பந்த இலக்கம் (Government Agreement Number) உள்ளதை உறுதிப்படுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த விதிமுறைகளை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2023 ஏப்ரல் 12ஆம் திகதியிடப்பட்ட 2327/36 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட 88ஆம் இலக்க பணிப்புரையின்படி, இலங்கை அரசாங்கத்துடன் செல்லுபடியாகும் ஒப்பந்தமொன்று இல்லாமல் மசகு எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் வகைகளை இறக்குமதி செய்யவோ உற்பத்தி செய்யவோ முடியாது என அதிகாரசபை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, சேமித்து வைக்கப்படும், கையிருப்பில் வைக்கப்படும், விற்பனை செய்யப்படும், பொதியிடப்படும், மீள்பொதியிடப்படும் அல்லது விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்படும் ஒவ்வொரு மசகு எண்ணெய் அல்லது கிரீஸ் பொதியிலும், அதற்குரிய அரசாங்க ஒப்பந்தத்துக்கு வழங்கப்பட்ட இலக்கம் கட்டாயமாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
குறித்த இலக்கம் கொள்கலன், பொதியுறை அல்லது உறையில் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். மாற்றாக, உறுதியாக ஒட்டப்பட்டுள்ள அடையாளச் சீட்டிலும் அதனைக் குறிப்பிட முடியும்.
இறக்குமதி அல்லது உற்பத்தி நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடாத சில்லறை விற்பனையாளர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை வலியுறுத்தியுள்ளது.
எனவே, வர்த்தகர்கள் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு முன்னர் அவற்றில் அரசாங்க ஒப்பந்த இலக்கம் உள்ளதா என்பதைச் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், விநியோகஸ்தர்கள், இறக்குமதியாளர்கள் அல்லது உற்பத்தியாளர்கள் தொடர்பான விபரங்களைப் பெற்றுக்கொள்வதுடன், கொள்வனவுக்கான பற்றுச்சீட்டுகள் மற்றும் விலைப்பட்டியல்களையும் சரிபார்ப்புக்காகப் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும்.
தற்போது விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள அனைத்து மசகு எண்ணெய்கள் மற்றும் கிரீஸ் வகைகளின் அடையாளச் சீட்டுகளையும் பரிசோதித்து, அவை உரிய விதிமுறைகளுக்கு இணங்குகின்றனவா என்பதை உறுதிப்படுத்துமாறும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விதிமீறல்களைக் கண்டறிவதற்காக சந்தை ஆய்வுகள் மற்றும் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது. விசாரணைகளின் பின்னர் பொறுப்புடைய தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
நுகர்வோர் இவ்விடயம் தொடர்பான முறைப்பாடுகளை 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தெரிவிக்க முடியும்.










