இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள பாதுகாப்புச் சட்டங்கள், அரசியலமைப்புப் பாதுகாப்புகள், அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் தொடர்பான முக்கிய கரிசனைகளை இராஜதந்திரப் பிரதிநிதிகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கமளித்துள்ளார்.
கொழும்பு 7இல் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் ஆகியவை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. இச்சட்டமூலங்கள் அடிப்படை உரிமைகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மீது ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் சி.வி.கே. சிவஞானம், செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சாணக்கியன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சுரேன் குருசுவாமியும் பங்கேற்றார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் சார்பில் மூவர் மாத்திரமே கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமொன்றைக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் தொடர்பிலும், அதுகுறித்து இராஜதந்திரப் பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலிலும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதிலும் இந்த மூன்று தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
இக்கலந்துரையாடலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் வரலாறு மற்றும் அதன் பின்னணி தொடர்பில் விரிவான விளக்கங்களை முன்வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், இவ்விடயத்தைச் சவாலுக்கு உட்படுத்தியதுடன், ஜனநாயக விரோதச் செயற்பாடுகள், மாகாண சபைகள் இல்லாத நிலை மற்றும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகள் தொடர்பிலும் தனது கரிசனைகளை வெளிப்படுத்தியிருந்தார்.
குறிப்பாக, ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியல் சுதந்திரங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதுடன், முன்மொழியப்படும் சட்டங்கள் தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.










