யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் 10ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “TECHNOVATE 2026 – Innovation Competition & Exhibition” புத்தாக்கப் போட்டி மற்றும் கண்காட்சி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீட வளாகத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
“Innovate – Create – Inspire” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, பொறியியலாளர் ஜோய் மாதவன் தலைமையில் இடம்பெற்றதுடன், தொழில்நுட்ப பீடத்தின் பீடாதிபதி கலாநிதி டி. கேதீசன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
பாரம்பரிய மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில், இளம் தலைமுறையினரின் புத்தாக்கச் சிந்தனைகள், தொழில்நுட்ப அறிவு மற்றும் நடைமுறைத் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு புத்தாக்கப் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களால் உருவாக்கப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் தீர்வுகளை முன்வைத்தனர்.
போட்டியில் சமர்ப்பிக்கப்பட்ட புத்தாக்கப் படைப்புகள் நடுவர் குழுவினரால் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், இரு பிரிவுகளிலும் சிறந்த புத்தாக்கங்களை முன்வைத்தவர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், புத்தாக்கத் துறையில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய இளம் கண்டுபிடிப்பாளரைப் பாராட்டும் வகையில் “இளம் புத்தாக்குனருக்கான விருது” வழங்கப்பட்டது.
மாணவர்களின் புதிய சிந்தனைகளை செயல்வடிவமாக்குவதற்கும், சமூகத்தில் காணப்படும் நடைமுறைப் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பத்தின் ஊடாக தீர்வுகளை முன்வைப்பதற்கும் TECHNOVATE 2026 களம் அமைத்துக் கொடுத்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் ஒரு தசாப்த கால பயணத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்நிகழ்வில் கல்வியாளர்கள், மாணவர்கள், புத்தாக்குனர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.










