யாரை ஆதரிப்பது என இதுவரையில் நான் தீர்மானிக்கவில்லை

-பதுளை நிருபர்-

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டில் நடைபெறவிருக்கின்றது அத்தேர்தலில் நான் யாரை ஆதரிப்பது என இதுவரையில் தீர்மானிக்கவில்லை,  என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.

பதுளை/ தெல்பெத்த இல 1 தமிழ் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அடுத்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவடைவதால் ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கின்றது. அதேவேளை பாராளுமன்றத்தை பொறுத்தவரை அதன் பதவிகாலம் 2025 ம் ஆண்டு ஆகஸ்ட்  மாதம் வரை இருக்கின்றது.

ஆகவே அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் ஒன்றை நாம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே அடுத்த வருட இறுதியிலே ஜனாதிபதி தேர்தல் ஒன்று நிச்சயமாக நடக்கும்.

இந்த ஜனாதிபதி தேர்தலிலே யாரை ஆதரிப்பது என இப்போதே சொல்ல முடியாது. ஏனெனில் இதுவரையில் யார் யார் ஜனாதிபதி வேட்பாளர்களாக களமிறங்க போகிறார்கள் என தெரியாது. எனவே களமிறக்கப்பட்ட பின்னர் தான் நான் யாரை ஆதரிப்பது என தீர்மானிப்பேன்.

நாடளாவிய ரீதியில் தற்போது விஷேட சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இதனால் பல்வேறு நாசகார செயல்களை நாங்கள் தடுக்க கூடியதாக இருக்கின்றது. விஷேடமாக போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலே சிக்கியுள்ளதை நாம் தினமும் பார்க்க கூடியதாக இருக்கின்றது.

தற்போதைய பொலிஸ் மா அதிபர் மிகுந்த அக்கறை காட்டி செயற்படுவதை காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விடயம் தொடர்ச்சியான முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே தமது எதிர்ப்பார்ப்பு ஆகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்தார்.