-மூதூர் நிருபர்-
சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறியதாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நான்கு சந்தேக நபர்களும் தலா 1 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் இன்று வெள்ளிக்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஸான் இவ்வாறு பிணை வழங்கியிருந்தார்.
நேற்று மூதூர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தின் பிரகாரம் அதனை உற்று நோக்கிய சம்பூர் பொலிஸார் ICCPR சட்டத்தை கைவாங்கியதன் மூலம் பிணை வழங்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இருப்பதன் காரணத்தினாலும் ,ஆஜராகிய சட்டத்தரணிகளின் விண்ணப்பத்திலும் திருப்தி அடைந்த நீதிமன்றமானது குறித்த நான்கு சந்தேக நபர்களையும் பிணையில் விடுவித்தது.
சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் நான்கு சந்தேக நபர்களும் 12 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் நகர்த்தல் பத்திரம் மூலம் இவர்கள் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்றைய பிணை வழங்கல் தொடர்பான நகர்த்தல் பத்திர விசாரணையில் 8 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்