தமிழ்நாட்டின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது தனிப்பட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளமை ஆச்சரியமளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி (UNP) தெரிவித்துள்ளது.
ஒரு நாட்டின் தலைவர் (Head of State), மற்றொரு நாட்டின் தலைவருக்கே இவ்வாறான வாழ்த்துச் செய்திகளை அனுப்ப வேண்டும் என்பதே இராஜதந்திர நடைமுறை (Protocol) என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஒரு வெளிநாட்டின் மாநில அல்லது மாகாணத் தலைவர்களுக்கு இவ்வாறான வாழ்த்துகளைத் தெரிவிப்பது மரபு அல்ல என ஐக்கிய தேசிய கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேற்கு வங்காளத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) அல்லது அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா (Himanta Biswa Sarma) ஆகியோருக்கு ஜனாதிபதி ஏன் இது போன்ற வாழ்த்துச் செய்திகளை அனுப்பவில்லை என அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
இராஜதந்திர நடைமுறைகளைப் பேணுவதில் ஜனாதிபதி பாரபட்சமாகச் செயல்படுவதாக ஐக்கிய தேசிய கட்சி தனது அறிக்கையில் மேலும் சாடியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்துத் தெரிவித்தமை தற்போது அரசியல் மட்டத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.