முச்சக்கரவண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் வத்தளையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
25 மற்றும் 28 வயதுடைய இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை பம்பலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி முச்சக்கரவண்டி ஒன்று திருடப்பட்டமை தொடர்பாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளன.
இதன்போது, ஒருவர் முச்சக்கரவண்டி திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரிலும், மற்றையவர் திருடப்பட்ட சொத்துகளைத் தம்வசம் வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சோதனை நடவடிக்கையின்போது ஐந்து முச்சக்கரவண்டி இயந்திரங்கள், இரண்டு முச்சக்கரவண்டி சேஸிகள், ஒரு முச்சக்கரவண்டி, ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன இலக்கத் தகடுகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் வத்தளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.










