மாத்தளை ராஜ வீதி, பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் ஒருவர் உடல் சிதைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது:
உக்குவளையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான (74 வயது) இவர், தனது 12 வயதுடைய பேரனை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு மாத்தளையிலுள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். மாத்தளை ராஜ வீதி வழியாகச் சென்றபோது, அதே திசையில் தம்புள்ளையை நோக்கி எரிவாயு ஏற்றிச் சென்ற பாரவூர்தியை (லொறி) முந்திச் செல்ல முற்பட்ட போதே எதிர்பாராதவிதமாக இந்த விபத்து இடம்பெற்றது. இவ்விபத்தில் பேரனான சிறுவன் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த போதிலும், மயிரிழையில் உயிர் தப்பினான்.
விபத்து குறித்த தகவலறிந்து அப்பகுதி மக்கள் பெருமளவில் திரண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸாரும், போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகளும் விபத்து நடந்த பகுதியைச் சுற்றித் தடுத்து நிறுத்தி, உயிரிழந்தவரின் உடலை மீட்டு, விபத்து இடம்பெற்ற இடத்தைச் சுத்தம் செய்தனர். காயமடைந்த சிறுவன் சிகிச்சைக்காக மாத்தளை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
விபத்து தொடர்பில் எரிவாயு லொறி சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.