மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நள்ளிரவு திருப்பலி

-மன்னார் நிருபர்-

மனிதத்தை உலகிற்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் அவதாரத்தினை சிறப்பிக்கும் கிறிஸ்துமஸ் பிறப்பு நள்ளிரவு திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை   இரவு மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி மாவட்டத்தின் முதல் பேராலயமான மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் கிறிஸ்மஸ் நள்ளிரவு திருப்பலி சிறப்பாக நடை பெற்றன.

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அருட்தந்தையர்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப் பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

இதன்போது இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் நள்ளிரவு பாலன் திருச்சொரூபம் வைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கிறிஸ்மஸ் விசேட கூட்டுத்திருப்பலியை ஆயர் ,அருட்தந்தையர்கள் , இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

கிறிஸ்து பிறப்பு விழா எங்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான விழா.அயினும் இலங்கை நாட்டிலே மக்கள் பல வகையில் கஷ்டப்படுகிறார்கள். விலைவாசி கூடியிருக்கிற நிலையில் அவர்கள் வழமையாக வாங்கக்கூடிய பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

சில குடும்பங்கள் மூன்று வேளையும் சாப்பிட முடியாமல் ஒரு வேளை மாத்திரம் சாப்பிடுகின்றனர்.

எனவே தான் இறை இயேசுவின் வருகையினால் மக்கள் இந்த நிலையில் இருந்து விடுபட வேண்டும்.

அவர்கள் இதையும் விட ஒரு நல்ல வாழ்வு வாழக்கூடியதாக வளம் பெற வேண்டும் என்றும் இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி எம்மிடம் இருந்து விலகி நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும்,திருப்தியோடும் வாழ இறைவன் எங்களுக்கு அருள வேண்டும் என இந்த நத்தார் தினத்தில் விசேடமாக நாங்கள் வாழ்த்துகிறோம்.

அந்த நம்பிக்கையில் மக்கள் தங்களுடைய கஸ்ட துக்கங்களில் இருந்து விடுபட இயேசு நாதரின் பிறப்பு ஒரு சிறந்த வழியாக அமைய வேண்டும் என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம். என ஆயர் தனது உரையில் தெரிவித்தார்.

திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டதை தொடர்ந்து அனைவருக்கும் ஆயர் மற்றும் அருட்தந்தை யர்களினால் அருளாசி வழங்கப்பட்டது.கிறிஸ்மஸ் ஆராதனையை முன்னிட்டு தேவாலயத்தில் பொலிஸார் பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

இதன் போது மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவுத் திருப்பலியில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.