-யாழ் நிருபர்-
புலம்பெயர் தேசத்தில் இருந்து வருபவர்களிடமும் ஏனையோரிடமும் இருந்து ஏமாற்றி பணம் மற்றும் நகைகளை பறித்த ஒரு கும்பலை சேர்ந்த சந்தேகநபர்கள் மூவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அந்த குழுவில் கணவன், மனைவி மற்றும் மச்சான் ஆகியோர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஆசை வார்த்தை கூறி, சந்தேகநபரான பெண் ஒரு வீட்டுக்கு அழைத்து செல்வார். இதன்போது அவ் இடத்திற்கு வரும் பெண்ணின் கணவனும், அவரது மச்சானும் குறித்த இடத்திற்கு சென்று காணொளி பதிவு செய்து அவர்களை மிரட்டி பணம் மற்றும் நகை என்பவற்றை அபகரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் இதே பாணியில் ஒரு சம்பவம் இடம்பெற்ற நிலையில், அது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்த குழுவினரை சுன்னாகம் பொலிஸார் இன்றையதினம் புதன்கிழமை கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஏற்கனவே முறைப்பாடுகள் இருப்பதாகவும், அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.