நுவரெலியா மாவட்டமானது சுற்றுலாத்துறைக்கு மட்டுமன்றி, மரக்கறிப் பயிர்ச்செய்கைக்கும் சிறப்புப் பெற்ற முக்கியமான விவசாயப் பிரதேசமாகும். இந்நிலையில், அண்மைக்காலமாகப் பெய்து வரும் அதிக மழை காரணமாக மாவட்டத்தின் பல பகுதிகளில் மரக்கறிப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், விவசாயிகள் பெரும் பொருளாதார நஷ்டங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.
சந்தையில் மரக்கறிகளுக்கான விலைகளும் கேள்வியும் அதிகரித்துக் காணப்படும் சூழலில், மறுபுறம் அதிக மழையினால் பயிர்கள் சேதமடைந்து வருவது விவசாயிகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, லீக்ஸ் கோவா,கெரட்,உள்ளிட்ட பல்வேறு மரக்கறிப் பயிர்கள் மஞ்சள் நிறமடைதல், அழுகுதல் மற்றும் விளைச்சல் குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன.
அதிக மழையினால் சில தோட்டங்களில் பயிர்கள் முழுமையாக வளர்ச்சியடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்களும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், பயிர்ச்செய்கைக்காகச் செய்யப்பட்ட ஆரம்ப முதலீட்டைக்கூட மீளப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், சில பகுதிகளில் மரக்கறிகளை அறுவடை செய்த பின்னர் மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. சில தோட்டங்கள் புற்கள் மண்டிய நிலையில் காணப்படுவதுடன், அடுத்தகட்டப் பயிர்ச்செய்கையை முன்னெடுப்பதற்குத் தேவையான நிதியின்றி விவசாயிகள் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
பல பகுதிகளில் விவசாய காணிகளில் கரையோர கட்டடங்களும் இடிந்து விழுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.
அதிகரித்த மழையினால் மரக்கறிப் பயிர்கள் மட்டுமன்றி, பல பகுதிகளில் தோட்டங்களில் அமைந்துள்ள கட்டடங்களும் பகுதியளவில் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால், பயிர்ச்செய்கையில் ஏற்பட்ட நஷ்டத்துடன் கட்டடங்களைச் சீரமைப்பதற்கும் விவசாயிகள் மேலதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே விதைகள் மற்றும் கன்றுகள், உரங்கள், விவசாய மருந்துகள், தொழிலாளர்களுக்கான கூலி உள்ளிட்ட செலவுகளுக்காகப் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ள விவசாயிகளுக்கு, பயிர்ச்சேதங்களும் தோட்டக் கட்டடங்களுக்கான சேதங்களும் மேலும் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தியுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தின் நானுஓயா பகுதியில் மரக்கறிப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயி ஒருவர் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது,
“நான் எனது பெரிய தோட்டத்தில் லீக்ஸ் பயிரிட்டேன். லீக்ஸ் கன்றுகளை வாங்குதல், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்ட ஆரம்பச் செலவுகளுக்காக சுமார் 80,000 ரூபாய் செலவிட்டேன். அதுமட்டுமன்றி, மருந்துகள் மற்றும் உரங்களுக்காகவும் அதிகளவு பணத்தைச் செலவிட்டேன்.
ஆனால், அதிக மழையினால் பாதிப் பயிர்கள் மஞ்சள் நிறமடைந்துள்ளதுடன், ஏனைய பயிர்களில் சில அழுகிப் போயுள்ளன. தோட்டத்தில் அமைந்திருந்த கட்டடத்தின் ஒரு பகுதியும் இடிந்து விழுந்து சேதமடைந்துள்ளது. இவ்வளவு செலவு செய்தும் இறுதியில் சுமார் 10,000 ரூபாய் மட்டுமே கிடைத்தது. இந்தத் தொகையை வைத்து எவ்வாறு செலவுகளை ஈடுசெய்வது?” என அவர் கவலையுடன் தெரிவித்தார்.
இவ்வாறான பாதிப்புகள் காரணமாக, சில விவசாயிகள் அடுத்த பருவத்திற்கான மரக்கறிப் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான முதலீட்டுப் பணமின்றித் தவித்து வருகின்றனர். ஏற்கனவே ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுசெய்ய முடியாத நிலையில், மீண்டும் கன்றுகளை வாங்குதல், உரங்கள் மற்றும் விவசாய மருந்துகளைப் பெற்றுக்கொள்ளுதல், தொழிலாளர்களுக்கான கூலியைச் செலுத்துதல் போன்ற செலவுகளைச் சமாளிப்பதும் அவர்களுக்குச் சவாலாக மாறியுள்ளது.
இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் மட்டுமன்றி, எதிர்காலப் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மரக்கறிப் பயிர்ச்செய்கையை நம்பி வாழும் விவசாயக் குடும்பங்கள் இந்நிலையிலிருந்து மீள்வதற்குத் தேவையான உதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
எனவே, அதிக மழையினால் பாதிக்கப்பட்ட மரக்கறி விவசாயிகளின் நிலைமையை உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு, பயிர்ச்சேதங்கள் மற்றும் தோட்டக் கட்டடங்களுக்கான சேதங்களை மதிப்பீடு செய்தல், தகுதியான விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்குதல் மற்றும் மீண்டும் பயிர்ச்செய்கையை ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகளை ஏற்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நுவரெலியா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மரக்கறிப் பயிர்ச்செய்கையைப் பாதுகாப்பதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகள் அவசியமாகின்றன.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசாங்கம் ஒரு தொகை பணத்தை இழப்பீடாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.










