
பேத்தாழை பொது நூலகம் தேசிய ரீதியில் முதலிடம்
2024 ஆம் வருடத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட நூலகங்களுக்கான விருது வழங்கும் விழா தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபை கேட்போர் கூடத்தில் கடந்த நவம்பர் 20 மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
2024 ஆம் வருடத்தில் பயனுள்ள வகையில் வாசிப்பை மேம்படுத்தும் திட்டங்களைச் செயற்படுத்திய மாநகர சபைகள், நகரசபைகள், பிரதேச சபைகள் மற்றும் பாடசாலை நூலகங்கள் என ஏறத்தாழ 1500 நூலகங்கள் இவ்விருதுக்காக அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதில், நாடு முழுவதிலும் இயங்கி வருகின்ற நூலகங்களுள் கடந்த வருடம் மிகவும் சிறப்பாக தேசிய வாசிப்பு மாத நிகழ்வுகளை ஒழுங்கமைத்து நடத்தியதுடன், வாசிப்பை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டங்களை சிறப்பாக செயற்படுத்திய நூலகங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கான விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இவ்விழாவில், கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் கீழ் இயங்குகின்ற பேத்தாழை பொது நூலகம் பிரதேச சபை வாரியாக தேசிய ரீதியில் மீண்டும் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டது.
இதற்கான விருதினை பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹிந்தும சுனில் செனவி, சான்றிதழினை தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க வழங்கி வைக்க, பொதுநூலகப் பொறுப்பாளர் மரகதம் பிரகாஷ், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜனாப்.அப்துல்லா ஹாரூன், நூலக உத்தியோகத்தர்களான புஸ்பா தயாளன், புனிதா ஈவெரா, கந்தையா கங்கா ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு வாழைச்சேனை, விநாயகபுரம், சந்திவெளி, தேவபுர பொதுநூலகங்கள் வாசிப்பு மாத நிகழ்வுகளை சிறப்பாக ஒழுங்கமைத்தமைக்காக விருது வழங்கி பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அகில இலங்கை ரீதியாக கடந்த வருடத்தில் சிறப்பாக செயற்பட்ட நூலக தேர்வில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளவற்றுள் அதிக நூலகங்களைக் கொண்ட பிரதேச சபையாக மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபை விளங்குகின்றது.
தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் விழாவில், நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் தலைவர், பணிப்பாளர்கள், பிரதிப் பணிப்பாளர் மற்றும் தேசிய நூலக மற்றும் ஆவணமாக்கல் சேவைகள் சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட நாடு முழுதிலுமிருந்து விருதுக்காக தேர்வுசெய்யப்பட்ட நூலகங்களில் பணிபுரிகின்ற நூலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.


