தெஹிவளை மிருகக்காட்சிசாலையில், அண்மையில் பிறந்த நைல் நீர்யானை குட்டிக்கு, சிறுவர்களுக்காக நடத்தப்பட்ட பிரத்தியேகப் போட்டி மூலம் ‘மோமோ’ (Momo) என உத்தியோகபூர்வமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, நேற்று வியாழக்கிழமை தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் இந்தப் பெயர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
நீர்யானைக் குட்டிக்குப் பெயரிடுவதற்காக நடத்தப்பட்ட போட்டியில் சிறுவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றதுடன், சுமார் 1,000 பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.
முன்மொழியப்பட்ட பெயர்களிலிருந்து மிருகக்காட்சிசாலையின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினால் ‘மோமோ’ என்ற பெயர் தெரிவு செய்யப்பட்டது.
இந்தப் பெயரை அவந்தா தமாரி என்ற சிறுமி முதன்முதலில் முன்மொழிந்திருந்தார்.
வெற்றி பெற்ற சிறுமி அவந்தாவைப் பாராட்டும் வகையில், சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜயகொடி சிறப்புப் பரிசுகளை வழங்கிவைத்தார்.
அதேவேளை, நீர்யானைக் குட்டியின் ஆரோக்கியத்தையும் நலனையும் உறுதிசெய்வதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட மிருகக்காப்பாளர்கள், கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்குத் திணைக்களம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டது.
மோமோ மீது பேரன்பு காட்டிய சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்த திணைக்களம், மிருகக்காட்சிசாலையின் புதிய வரவான ‘மோமோ’வை நேரில் வந்து பார்வையிடுமாறு குடும்பங்களுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.










