நிலாவெளியில் இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் 9 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான காணொளி அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் சம்பவம் தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
2025 மார்ச் 31ஆம் திகதி நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக திருகோணமலைப் பிரிவு பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் அதிகாரிகள், அதிக சத்தத்தை ஏற்படுத்தியவாறு வீதியில் செலுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றை கைப்பற்றியிருந்தனர்.
அந்த மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தபோது, குழுவொன்று பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடி குழுவாக செயற்பட்டதாகக் கூறப்படும் அந்தக் குழுவினர், இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியதுடன், அவர்களுக்கு காயங்களையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸ் அதிகாரிகள் சட்டவிரோதமாக தடுத்து வைக்கப்பட்டதுடன், அவர்களுக்குச் சொந்தமான பொருட்கள் மற்றும் பொலிஸ் சீருடையின் சில பகுதிகளும் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நிலாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில் உடனடியாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்பட்ட இடத்துக்கு சந்தேகநபர்கள் பயணிக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் முச்சக்கர வண்டியொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 9 சந்தேகநபர்களுக்கு எதிராக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் தாக்கல் செய்யப்பட்டன.
வழக்கு விசாரணையின் பின்னர் 9 பேரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு அபராதம் மற்றும் இழப்பீடு செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீருடையில் கடமையாற்றிய இரு பொலிஸ் அதிகாரிகள் தாக்கப்படும் காணொளி சமூக ஊடகங்களில் பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, சம்பவத்தின் பின்னணி தொடர்பான இந்தத் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.









