அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களில் சீட் பெல்ட் அணியத் தவறிய சுமார் 3,000 சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர, சீட் பெல்ட் அணிவது தொடர்பான சட்டம் தற்போது கடுமையாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு அபராதம் விதிப்பது அல்லது தண்டிப்பது மாத்திரம் இதன் நோக்கமல்ல என்றும், சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் மணிக்கு 100 கிலோமீற்றர் வரையான வேகத்தில் வாகனங்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவதால், திடீர் பிரேக்கிங் அல்லது விபத்து ஏற்படும் சந்தர்ப்பங்களில் சீட் பெல்ட் அணியாத பயணிகளுக்கு கடுமையான காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீட் பெல்ட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், சீட் பெல்ட் சட்டம் அமுல்படுத்தப்பட்ட மறுநாளே தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற 11 வாகனங்கள் தொடர்புடைய விபத்தையும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு சிறிய காயங்கள் மாத்திரமே ஏற்பட்டதுடன், உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அதிக வேகத்தில் இடம்பெறும் விபத்துகளின்போது காயங்களின் தீவிரத்தைக் குறைப்பதில் சீட் பெல்ட் முக்கிய பங்கு வகிப்பதை இந்தச் சம்பவம் எடுத்துக்காட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலிஸ் நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக மாத்திரம் சீட் பெல்ட் அணியாமல், தங்களது உயிரைப் பாதுகாப்பதற்கான அத்தியாவசிய பாதுகாப்பு நடவடிக்கையாக அதனை கருதி அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சீட் பெல்ட் விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம், பயணங்களின்போது சீட் பெல்ட் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.









