-வெள்ளாவெளி நிருபர்-
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகமானது சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள சர்வதேச தாய்மொழி தின நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
தாய்மொழிக்காக போராடி உயிரிழந்தவர்களை நினைவுகூறி, உலகின் அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் வகையில் பெப்ரவரி 21ஆம் திகதியை சர்வதேச தாய்மொழி தினமாக ( International Mother Language Day) ஐ.நாவின் யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தியது. இதனையடுத்து 2000ஆம் ஆண்டிலிருந்து பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகின்றது.
இதன்போது ” நம் தாய்மொழியை பேணுதல் ஒரு பன்முக நோக்கு” எனும் தலைப்பின் கீழ் தென்கிழக்கு பல்கலைக்கழக உதவி பதிவாளர் சஞ்சீவி சிவகுமாரால் சிறப்புரையொன்று நிகழ்த்தப்பட்டதுடன், பிரதேச கலைஞர்களின் பாடல்கள் மற்றும் கலைக்கழக மாணவர்களின் நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் கதிரவன் பட்டிமன்ற பேரவை வழங்கும் 126ஆவது சிறப்பு பட்டிமன்றம் “தற்காலத்தில் தமிழ்மொழி வளர்கிறது, தற்காலத்தில் தமிழ்மொழி தளர்கிறது” எனும் தலைப்பில் இடம்பெற்றமை விசேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன்,பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் அலுவல உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


