சினோபெக் (Sinopec), ஆர்எம் பார்க்ஸ் (RM Parks) மற்றும் லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனங்களுடன் இணைந்த எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள், தமது நிலையங்களுக்கு போதிய எரிபொருள் விநியோகம் செய்யப்படுவதில்லை எனக் குற்றஞ்சாட்டி, இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையத்திற்கு (World Trade Centre) முன்னால் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஒன்றுகூடி, தமது கோரிக்கைகள் மற்றும் குறைகளை உள்ளடக்கிய கடிதமொன்றை சமர்ப்பித்தனர்.
மேலும், தொடர்ச்சியாக நிலவி வரும் எரிபொருள் விநியோகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தலையீடு கோரி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC), சீனத் தூதரகம் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியவற்றுக்கும் கடிதங்களை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்தனர்.
போதிய எரிபொருள் விநியோகம் இல்லாததால் எரிபொருள் நிரப்பு நிலையங்களை நடத்துவதில் அதிக சிரமங்கள் ஏற்படுவதாகவும், இதனால் நுகர்வோருக்கு கடுமையான அசௌகரியங்கள் ஏற்படக்கூடும் என்றும் போராட்டக்காரர்கள் எச்சரித்தனர்.
தற்போதைய எரிபொருள் விலை நிர்ணய முறையிலும் அவர்கள் கவலைகளை வெளியிட்டனர். நடைமுறையில் உள்ள விலைகளில் எரிபொருளை இலாபகரமாக விற்பனை செய்ய முடியாத காரணத்தினால் தனியார் நிறுவனங்கள் விநியோகத்தை மட்டுப்படுத்துவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
எரிபொருள் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், விலை நிர்ணய சூத்திரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும் சுயாதீன அதிகாரசபையொன்றை நியமிக்குமாறு விநியோகஸ்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எரிபொருள் விநியோகப் பிரச்சினை குறித்து அதிகாரிகள் விளக்கம்
இதற்கிடையில், கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர், தற்போது நிலவும் சர்ச்சை தொடர்பில் விளக்கமளித்தனர்.
தற்போதைய விலை நிர்ணய கட்டமைப்பின் கீழ் நிதி இழப்புகளைச் சந்திப்பதாக தனியார் எரிபொருள் நிறுவனங்கள் முறைப்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விலை நிர்ணய சூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்புகளுக்கு உட்பட்டு சில எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சில நிறுவனங்கள் ஏற்கனவே ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சூப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளை அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
எவ்வாறாயினும், தற்போதைய ஏற்பாடுகளின் கீழ் தனியார் எரிபொருள் நிறுவனங்கள் விநியோகிக்கும் எரிபொருளின் அளவைக் கட்டுப்படுத்த அரசாங்கத்திற்கு நேரடி அதிகாரம் இல்லை என்பதை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.
நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியங்களைக் குறைக்கும் வகையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதிய எரிபொருள் இருப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை தொடர்ந்து நீடித்தால், தனியார் எரிபொருள் நிறுவனங்களை நிர்வகிக்கும் சட்ட ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து, மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தனியார் எரிபொருள் நிறுவனங்களின் விநியோகம் குறைந்துள்ளதாகக் கவலைகள் எழுந்துள்ள நிலையில், நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு உள்ளதாகவும், ஒட்டுமொத்த எரிபொருள் தட்டுப்பாடு எதுவும் நிலவவில்லை என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.










