அரசாங்க வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி, ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை சிங்கள மொழி அரச நாளிதழில் பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரமொன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் 29ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், சுமார் 66 இலட்சம் ரூபாவை அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த நிதியத்துக்கு செலுத்துமாறும், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி நாளிதழ்களில் பகிரங்க மன்னிப்புக் கோரி விளம்பரங்களை வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் பௌஸிக்கு உத்தரவிட்டிருந்தது.
இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக நெதர்லாந்து அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாகனத்தைத் தனது தனிப்பட்ட நலனுக்காகப் பயன்படுத்தியதன் மூலம், அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்துக்கான அடிப்படை உரிமையை அவர் மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்மானித்தது.
பொதுமக்களின் நம்பிக்கைக்குத் துரோகம் இழைக்கும் செயலாக பௌஸியின் நடவடிக்கையை நீதிமன்றம் வர்ணித்திருந்தது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன மற்றும் நீதியரசர்களான ஜனக் டி சில்வா, அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரான சந்திரா ஜயரத்ன தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
மேலும், வாகனத்தின் புகைப்படத்துடன் அரைப்பக்க அளவிலான மன்னிப்புக் கோரும் விளம்பரங்களை அரச நாளிதழ்களான சிலுமின, சண்டே ஒப்சர்வர் மற்றும் தினகரன் ஆகியவற்றில் வெளியிடுமாறும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.










